திருப்பூரில் விரைவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடங்கப்படும் - மத்திய மந்திரி தகவல்


திருப்பூரில் விரைவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடங்கப்படும் - மத்திய மந்திரி தகவல்
x

சென்னையை அடுத்த கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர் நலன் துறை சார்பில் நடந்த விழாவில் மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கலந்து கொண்டார்.

சென்னை:

சென்னையை அடுத்த கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர் நலன் துறை சார்பில் நடந்த விழாவில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல், திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிரது. விரைவில் அது தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பீடி தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தொழிலாளர் நலன் இயக்குனரகம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பீடி தொழிலாளர்களுக்கான 22 மருந்தகங்கள் மற்றும் ஒரு மத்திய மருத்துவம்னை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி(இ.பி.எப்.) சார்பில் ''பிரயாஸ்'' என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழிலாளர் ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு சேரவேண்டிய வருங்கால வைப்புநிதி மொத்தமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story