ஆங்கில புத்தாண்டையொட்டி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மரியாதை


ஆங்கில புத்தாண்டையொட்டி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மரியாதை
x

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்களான அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதி நினைவிடத்தில், 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று வாசகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தியபோது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கும் முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

வாழ்த்து

முன்னதாக, மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், முத்துசாமி, சா.மு.நாசர், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, பி.வில்சன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

காசிமுத்துமாணிக்கம்

மேலும் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல, தலைமைச் செயலாளர் இறையன்பு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நகர் ஊரமைப்பு இயக்குனர் பி.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்பட ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல்-அமைச்சரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

புதியதொரு விடியல்

ஆங்கில புத்தாண்டையொட்டி, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், 'புதியதொரு விடியலில் புலர்ந்தது புத்தாண்டு. உடன்பிறப்புகள்-பொதுமக்கள்- நண்பர்கள் என காலை முதல் அன்பொழுக வாழ்த்துகளை பகிரும் நல்லுள்ளங்கள். வாழ்த்து பெறுகிறேன். வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் அனைத்து வளங்களும் மகிழ்ச்சியும் வாழ்வில் பொங்க' என்று கூறியுள்ளார்.


Next Story