ஆன்லைனில் முதலீடு செய்துரூ.8¾ லட்சத்தை இழந்த என்ஜினீயர்


ஆன்லைனில் முதலீடு செய்துரூ.8¾ லட்சத்தை இழந்த என்ஜினீயர்
x

திருச்சியில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைனில் முதலீடு செய்து சாப்ட்வேர் என்ஜினீயர் ரூ.8¾ லட்சத்தை இழந்தார். மற்றொரு சம்பவத்தில் ரூ.3¼ லட்சத்தை பெண் ஒருவர் பறிகொடுத்தார்.

திருச்சி

திருச்சியில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைனில் முதலீடு செய்து சாப்ட்வேர் என்ஜினீயர் ரூ.8¾ லட்சத்தை இழந்தார். மற்றொரு சம்பவத்தில் ரூ.3¼ லட்சத்தை பெண் ஒருவர் பறிகொடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாப்ட்வேர் என்ஜினீயர்

திருச்சி காந்திமார்க்கெட் டெய்லர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி மர்ம நபர் ஒருவர், பிரவீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், தான் பிரபல தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பதாக அறிமுகம் செய்து கொண்டாா். அத்துடன் பகுதி நேரமாக யூடியூப் வீடியோவை சப்ஸ்கிரைப் செய்து ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.100 வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆன்லைன் டிரேடிங்

இதை நம்பி அவர் அனுப்பிய @Ambika8965 என்ற டெலிகிராம் ஐ.டி.யை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த ஐ.டி.யில் இருந்து வந்த வீடியோவை சப்ஸ்கிரைப் செய்தார். இதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டது.

இதற்கிடையே அதே மர்மநபர், நீங்கள் ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பிரவீன், அவர் கூறியபடி Bitfiyerp.top என்ற இணையதளத்தில் முதலீடு செய்தார்.

ரூ.8¾ லட்சம் மோசடி

அதன்பிறகு பிரவீன் பிரீபெய்ட் டாஸ்க் மூலம் ரூ.15 ஆயிரத்து 600 முதலீடு செய்தார். அதற்கு கமிஷனாக ரூ.21 ஆயிரத்து 870 கிடைத்தது. இதனால் உற்சாகமான பிரவீன், கடந்த ஜூலை மாதம் 25 மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 800 முதலீடு செய்தார்.

அதன்பிறகு அவருக்கு கமிஷன் வரவில்லை. முதலீடு தொகையையும் திரும்ப பெற முடியவில்லை. அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த மர்மநபர் நூதன முறையில் ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 800-ஐ அபேஸ் செய்துவிட்டார்.

ரூ.3¼ லட்சம் பறிகொடுத்த பெண்

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரவீன் திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் மற்றொரு சம்பவத்தில் தில்லைநகரை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் அழைப்பில் மர்மநபர் கூறிய அறிவுரையை நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 100-ஐ முதலீடு செய்தார்.

பின்னர் அந்த இணையதளத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். இதனால் அவர் பணத்தை பறிகொடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story