சிங்கப்பூர் விமானத்தில் எந்திரக்கோளாறு: சென்னையில் 12 மணி நேரம் பயணிகள் தவிப்பு
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட எந்திரக்கோளாறால் 12 மணிநேரம் விமான நிலையத்தில் பயணிகள் பரிதவித்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய 168 பயணிகள் இரவு 11 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்து சோதனைகளை முடித்துவிட்டு தயாராக இருந்தனர்.
அந்த விமானம் வழக்கமாக இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். சிங்கப்பூரில் இருந்து விமானம் சென்னைக்கு வந்துவிட்டது. ஆனால் அந்த விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை சரி செய்த பின் விமானத்தை இயக்க வேண்டும் என்றும் விமானி குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.
பயணிகள் வாக்குவாதம்
இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 6 மணி வரையிலும் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்ட்டரை சூழ்ந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு சரி செய்யப்படவில்லை. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்றனர்.
இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் பரிதவித்துக்கொண்டு இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று மதியம் 1.45 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் 12 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.