குட்டிகளுடன் உலா வரும் யானைகள்
கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது. இதில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள்.
இதில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
வெடி வெடித்து விரட்டும் பணி
இந்த நிலையில் கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதியில் 2 குட்டிகளுடன் 7 யானைகள் சுற்றித்திரிந்தது. இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வனரேஞ்சர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடையநல்லூர் பீட் வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் சென்றனர்.
தொடர்ந்து வனத்துறையினர் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வனத்துறையினர் வேண்டுகோள்
இதற்கிடையே வனப்பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள கல்லாறு பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.