தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழை- தென்னை சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழை மற்றும் தென்னைகள் சேதம் ஆனது.
தாளவாடி:
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழை மற்றும் தென்னைகள் சேதம் ஆனது.
தொடர்கதை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
விவசாயி
இதுபோன்ற சம்பவம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட ஜோரா ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 34). விவசாயி. இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் தென்னை மற்றும் வாழையை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த 4 காட்டு யானைகள் வெளியேறி ரவிக்குமார் தோட்டத்துக்குள் புகுந்தன.
சேதம்
பின்னர் அந்த யானைகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரக்கன்றுகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. யானைகளை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 15 தென்னை மரக்கன்றுகள், 100 வாழை மரங்கள் சேதம் அடைந்தன.