பென்னாகரம் அருகேகிராமங்களில் சுற்றித்திரியும் ஆண் யானைவனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்
பென்னாகரம்:
பென்னாகரம் உள்ள கிராமங்களில் சுற்றிதிரியும் ஆண் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகள்
கர்நாடகா மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் இருந்து வழிதவறிய மக்னா (தந்தம் இல்லாத யானை) மற்றும் காட்டு யானை தர்மபுரி மாவட்டம் சஞ்சீவராயன் மலை வழியாக பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகதாசம்பட்டி அருகே தொட்டிபள்ளம் கிராமப் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டு இருந்தது.
இந்த 2 காட்டு யானைகளும் இரவு நேரங்களில் தொட்டிபள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பயிர்கள் சேதம்
அதன்பேரில் தொட்டிபள்ளம் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு மற்றும் தகர பெட்டிகளை கொண்டு சத்தம் எழுப்பி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் தாசம்பட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் யானை தாசம்பட்டி மருக்காரம்பட்டியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் மீண்டும் ஆண் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விரட்டும் பணி
இதையடுத்து அந்த ஆண் யானை சின்னாறு வழியாக பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்குந்தி பகுதிக்கு வந்தது. அங்கிருந்து போடூர், மடம், கூத்தப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றித்திரிகிறது. இதனால் வனத்துறையினர் ஆண் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்