பகவதியம்மன் கோவில் தேர்த்திருவிழா
பரமத்திவேலூரில் பகவதியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர்
பகவதியம்மன் கோவில்
பரமத்திவேலூர், மேலத்தெருவில் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளர். இந்த திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். அதனைதொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 24-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று திருத்தேர் விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் திருத்தேரில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று தீமிதி விழா
இதில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று (புதன்கிழமை) மாலை தீ மிதி விழா நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) பொங்கல் மாவிளக்கு மற்றும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. பின்னர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல் விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் பகவதியம்மன் கோவில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.