திருத்தணியில் குட்டையில் மூழ்கி முதியவர் பலி; 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு


திருத்தணியில் குட்டையில் மூழ்கி முதியவர் பலி; 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு
x

திருத்தணியில் மதுபான கடை அருகே குட்டையில் மூழ்கி முதியவர் பரிதாபமாக பலியானார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

திருவள்ளூர்

முதியவர் பிணம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடை அருகே உள்ள குட்டையில் முதியவர் பிணம் ஒன்று மிதப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார் குட்டையில் மிதந்து இருந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த முதியவரின் பெயர் பீர்லூ மந்தடி (வயது 70) என்பதும், விவசாயியான இவர், கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

குட்டையில் மூழ்கி சாவு

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிய பைபாஸ் பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு அருகே உள்ள தண்ணீர் உள்ள குட்டைக்கு சென்ற நிலையில், அதில் தவறி விழுந்த அவர் மூழ்கி பரிதாபமாக இறந்ததும் உறுதியானது. அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் 3 நாட்களாக முதியவர் உடல் மிதந்ததை யாரும் கவனிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

பிணமாக மீட்கப்பட்ட பீர்லூ மந்தடியை 3 நாட்களாக மனைவி வசந்தா மற்றும் அவரது 2 பிள்ளைகள் பல்வேறு இடங்களில் தேடி வந்ததையடுத்து, நேற்று அவர் பிணமாக மீட்கப்பட்டது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story