விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி:தனிநபருக்காக பாலம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது:கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும் முயற்சியாக கொட்டக்குடி ஆற்றில் தனிநபருக்காக பாலம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில், மொத்தம் 309 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 663 மதிப்பில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக்கடன் மானிய தொகை பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
இந்து முன்னணி
இக்கூட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'பூதிப்புரம் செல்லும் வழியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் விளை நிலங்களை வீட்டுமனையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். இதற்காக கொட்டக்குடி ஆற்றை மாசுபடுத்தி பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி சான்றிதழ் வழங்கக்கூடாது. ஆற்றில் தனி நபருக்காக நடக்கும் பாலம் கட்டும் பணிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று கூறியிருந்தனர்.
வடபுதுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊரில் உள்ள சுப்பநாயுடு தெருவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு தனிநபர் ஆக்கிரமிப்பு இடையூறாக உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை கால்வாய் வசதி, சாலை பணிகள் நடக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.