ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடக்கும் நிலை


ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடக்கும் நிலை
x

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் அவற்றை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்


உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் அவற்றை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண்மை விரிவாக்க மையம்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உலர வைப்பதற்கான உலர்களங்கள், இருப்பு வைப்பதற்கான கிடங்குகள், விற்பனை செய்வதற்கான தேசிய வேளாண் சந்தை இவை அனைத்தும் ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது.இங்கு கூடுதலாக நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம், மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரம், எடை மேடை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.அத்துடன் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்டங்கள், பூச்சி கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் சேமிப்புக்கிடங்கும் இங்கு உள்ளது.

கொப்பரை கொள்முதல் மையம்

தற்போது இந்த வளாகத்தின் உள்ளேயே கொப்பரை கொள்முதல் மையமும் செயல்பட்டு வருகிறது. இதனால் தினசரி இங்கு ஏராளமான விவசாயிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் இந்த வளாகத்தின் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விளை பொருட்களை உலர வைக்கும் விவசாயிகள் பல மணி நேரம் இந்த வளாகத்தில் இருக்கின்றனர்.அதே நேரத்தில் இந்த வளாகத்தில் பல இடங்களில் புதர்ச் செடிகள் வளர்ந்திருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருகிறது.இது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது.எனவே புதர்ச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இந்த வளாகத்தில் கூடுதலாக உலர் களம் கட்டும் பணி மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக அந்த பகுதியில் உள்ள புதர்ச்செடிகள் மட்டும் அகற்றப்பட்டது.

ஆனால் அகற்றப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்டவையும் அந்த பகுதிக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story