தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7 ¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதை தவிர பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 15-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியாறு அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 110.25 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 431 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 159 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை 110 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அப்பர் ஆழியாறில் மின் உற்பத்தி மேற்கொள்ளும் போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். அணை 115 அடியை எட்டியதும், 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story