சுங்கான்கடை அருகே கார் மோதி டிரைவர் பலி
சுங்கான்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ரோடு ரோலர் எந்திர டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை,
சுங்கான்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ரோடு ரோலர் எந்திர டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர்
நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் பெருவிளையை சேர்ந்தவர் ஹரி (வயது44). இவர், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் எந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுமிதா(40) என்ற மனைவியும், சுஜன்(15) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஹரி வேலை முடிந்து தக்கலையில் இருந்து பார்வதிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கார் மோதியது
சுங்கான்கடை குதிரைபாய்ந்தான் குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் ஹரியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகிறார்கள்.