போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
பாஞ்சாங்குளத்தை தொடர்ந்து சுரண்டையிலும் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
பாஞ்சாங்குளத்தை தொடர்ந்து சுரண்டையிலும் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
முற்றுகையிட முயற்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பாஞ்சாங்குளத்தில் சமீபத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு தரப்பை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் பொதுமக்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், முற்றுகையிட வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 4 பேர் மட்டும் சென்று மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் மனுவை கொடுத்து சென்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த மனுவில், "சுரண்டை பஞ்சாயத்து காலனி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஒருவர், குறிப்பிட்ட ஒரு சமுதாய குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுக்கிறார். ஏற்கனவே ஒரு பெண்ணிடம் சாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி அதுகுறித்து தீண்டாமை வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அவர் தகராறு செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.