பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
காதல் திருமணம் செய்த பெண்ணிடம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே உள்ள முருகத்தூரன்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி மகள் வஜூன் மோசிகா (வயது 27). இவரும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ரஞ்சிதராஜ் மகன் வக்கீலான தமிழ்ச்செல்வன் (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுரையில் ஒன்றாக வசித்து வந்தனர். வஜூன் மோசிகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனின் தந்தை ரஞ்சிதராஜ், தாய் சுப்புலட்சுமி மற்றும் உறவினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் வஜூன் மோசிகாவிடம், 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வஜூன் மோசிகா, நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழ்ச்செல்வன், அவரது தந்தை ரஞ்சிதராஜ், தாய் சுப்புலட்சுமி, உறவினர் வெற்றிச்செல்வன் ஆகிய 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.