"அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வராதீங்க"


அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வராதீங்க
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வராதீங்க என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

நேற்று காலையிலேயே சூரியன் வெப்பத்தை கக்கியது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து, மதியம் 12 முதல் 3 மணி வரை கத்திரி வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. சூரியன் அனலை கக்கியது. இதனால் கடலூரில் 104 டிகிரியும், விழுப்புரத்தில் 103 டிகிரியும், கள்ளக்குறிச்சியில் 101 டிகிரியும் வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்தில் சென்ற பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூரில் வறண்ட காற்று மேற்கு பக்கத்தில் இருந்து அதி தீவிரமாக வீசுகிறது.

இது கடல் காற்றை உள்ளேவிடாமல் தடுக்கிறது. மேலும் காற்றில் இருந்த ஈரப்பதத்தை மோக்கா புயல் ஈர்த்து சென்று விட்டது. வழக்கமாக கடலூரில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை கடல் காற்று உள்புகும் போது வெப்பம் குறையும்.

ஆனால் தற்போது கடல்காற்று உள்புகும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், அதிதீவிரமாக வீசும் வறண்ட காற்றாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இது இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும். எனவே பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.

ஒருவேளை அவசியம் ஏற்பட்டால் குடிநீர், குடை, தொப்பி உள்ளிட்ட முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். செல்ல பிராணிகளையும் நிழல் பகுதியில் பராமரிக்க வேண்டும் என்றார்.


Next Story