வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை: வணிக சிலிண்டர் விலை ரூ.36.50 குறைப்பு
வணிக சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைத்து ரூ.2 ஆயிரத்து 141 ஆக நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரூ.2,177.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு, ரூ.2,141 என்று நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல், சென்னையில் ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
மாதந்தோறும் விலை மாற்றம்
கட்டணம் குறைப்பு குறித்து எழும்பூர், சென்டிரல் பகுதிகளில் டீக்கடைகள் நடத்தி வருபவர்கள் கூறியதாவது:-
வணிக சிலிண்டர்கள் விலையை குறைத்ததை வரவேற்கிறோம். வணிக சிலிண்டர்களை நம்பி வாழும் சிறு வணிகர்கள் விலை ஏற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
மாதந்தோறும் விலை ஏற்றம் செய்யும் முறையையும் மாற்றம் கொண்டு வந்து சிறிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றனர்.
விமான எரிபொருள் விலை குறைப்பு
இதற்கிடையே விமான எரிபொருளின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன. அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.16 ஆயிரத்து 232 குறைக்கப்பட்டுள்ளது. இது 12 சதவீத விலை குறைப்பாகும்.
இதன் மூலம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 915.57 விற்கப்படுகிறது. இதுவரை இல்லாத அதிகபட்ச விலை குறைப்பு இது என்று கூறப்படுகிறது.