பள்ளிபாளையம் பகுதியில் பெரியம்மை நோய் பாதித்த மாடுகளை டாக்டர்கள் பரிசோதனை
பள்ளிபாளையம் பகுதியில் பெரியம்மை நோய் பாதித்த மாடுகளை டாக்டர்கள் பரிசோதனை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ரங்கனூர், எலந்தகுட்டை, வெப்படை, மேட்டுக்கடை, குட்டிக்கிணத்தூர், வெள்ளைபாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கால்நடை டாக்டர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மாடுகளை பரிசோதனை செய்தனர். அதில் நாட்டு மாடுகளுக்கு லேசான பெரியம்மை நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் ரமேஷ், குமாரபாளையம் கால்நடை உதவி மருத்துவர் செந்தில்குமார், எலந்தகுட்டை உதவி மருத்துவர் உமேஷ் பூபாலன் உள்ளிட்டோர் நேற்று பெரியம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாட்டு மாடுகளை பரிசோதனை செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் விவசாயிகளிடம் நோய் பாதித்த மாடுகள் தனியே வைத்திருக்க வேண்டும். மற்ற மாடுகளுடன் சேர்க்கக்கூடாது. மாடுகளுக்கு வழங்க வேண்டிய தீவனங்கள் குறித்து விளக்கி கூறினர்.