அரசு தங்கும் விடுதிகளை தவிர்த்து வெளியிடங்களில் தங்கக்கூடாது
வெளியூர்களில் இருந்து வந்து படித்தாலும், அரசு தங்கும் விடுதிகளை தவிர்த்து வெளியிடங்களில் தங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு கடந்த 31-ந்தேதி கன்னிவாடியில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. பின்னர் உரிய நடைமேடையில் நிறுத்துவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது அங்கு பள்ளி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாணவர்களை விலகி நிற்கும்படி கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு வந்த மேலும் சில மாணவர்கள் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் டிரைவரும், கண்டக்டரும் காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் டிரைவர், கண்டக்டரை தாக்கியது திண்டுக்கல், தேனி, மதுரையை சேர்ந்த 5 பள்ளி மாணவர்கள் என்பதும், அதில் 2 பேர் அரசு தங்கும் விடுதியில் தங்காமல் வெளியிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் இளம் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிக்குழும தலைவர் பிரியா விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து படித்தாலும் தனியார் விடுதி, வீடுகளில் தங்கி படிக்க கூடாது. அரசு தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். எனவே அரசு தங்கும் விடுதியில் வசிக்க அனுமதி பெற்ற ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு மாணவர்கள் படிப்பை தொடரலாம். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் இனிவரும் காலங்களில் ஈடுபடக்கூடாது என மாணவர்களுக்கு குழும தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.