தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி
திருவாரூரில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருவாரூரில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொற்கிழி வழங்கும் விழா
திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நண்பர் தென்னனின் 100-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரத்தின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா திருவாரூர் வன்மீகபுரம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர்கள்
நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். அதில் திருவாரூருக்கு வந்தால் என்றால் தனி சிறப்பும், தனி பாசமும், எழுச்சியான வரவேற்பும் தான் வழங்கப்படும். தி.மு.க. ஆட்சியில் டெல்டா பகுதியில் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு முதல்-அமைச்சரே டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் என ஏற்கனவே முதல்-அமைச்சர் பல முறை பதில் அளித்துள்ளார்.
இப்போது நானும் அதனை தான் பெருமையுடன் கூற விரும்புகிறேன். நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தான். எனவே டெல்டா மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் உள்ளனர். முதல்-அமைச்சர் இங்கு அடிக்கடி வந்து செல்கிறார். நான் மாதம் ஒரு முறை வந்து உங்களை எல்லாம் சந்தித்து கொண்டு இருக்கின்றேன்.
பிறந்த நாள் பரிசு
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அந்தந்த மாவட்ட செயலாளரிடம் சொல்வது எந்த நிகழ்ச்சி என்றாலும் வருகிறேன். ஆனால் எனக்காக ஒரு நிகழ்ச்சி நடத்திட வேண்டும் என்றால், அது மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியாக தான் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். இளைஞரணி சார்பில் அனைத்து மாவட்டங்களில் கழக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எனக்கு ஒவ்வொரு பட்டம் கொடுக்கிறார்கள். இப்போது கடைசியாக கொடுக்கப்பட்ட பட்டம் சின்னவர். இந்த மேடையை பொருத்தவரை அது எனக்கு பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த மேடையில் அனுபவத்திலும், வயதிலும் சரி நான் தான் சின்னவன்.
இன்றைக்கு என்னை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சாரட் வண்டியில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அழைத்து வந்தார். இன்று(நேற்று) அவருக்கு பிறந்த நாள், அதனால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக சாரட் வண்டியில் மகிழ்ச்சியுடன் பவனித்தேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சாரட் வண்டியில் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முன்னதாக திருவாரூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நண்பர் தென்னன் இல்லத்தில் அவருடை உருவப்படத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சன்னதி தெரு வந்தார். அங்கிருந்து மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா அரங்கிற்கு செல்வதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாரட் வண்டியில் அமர வைத்து மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஓட்டி சென்றார். அப்போது அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, நாஜிம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்தி, ராமகிருஷ்ணன், சாந்தி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், ஜெயதேவன், மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.