ஈரோடு மாவட்ட காதி கிராப்டில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


ஈரோடு மாவட்ட காதி கிராப்டில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
x

ஈரோடு மாவட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

காந்தி பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டத்தில் கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 2 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக 150 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ரூ.225 முதல் ரூ.250 வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2 கதர் உற்பத்தி நிலையங்கள் மூலமாக நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.80 லட்சம் மதிப்புக்கு கதர் மற்றும் பாலிஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 3 காதி கிராப்டுகள் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடான ரூ.2 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.90 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சம் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ஆடைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவாரணி, எழில் சாம்பு மற்றும் தேன் வகைகளுக்கு நடப்பாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.44 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப்பொருட்கள் ரூ.1 கோடியே 70 லட்சம் உற்பத்தி இலக்கில், தற்போது வரை ரூ.60 லட்சத்துக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மானியம்

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 17 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 58 பேருக்கு ரூ.81 லட்சத்து 41 ஆயிரம் மானியமும், 260 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய குடிமகனான நாம் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் சீனிவாசன், தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story