தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
ஓசூரில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
ஓசூர்
ஓசூரில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
கலந்துரையாடல்
ஓசூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பின் சார்பில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., குழு துணைத்தலைவர் நிகோலஸ் பார்டாட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழு ஒருங்கிணைப்பாளர் வேணுசான் பாக் வரவேற்றார். இதில் தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், தமிழக அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடையும் வழிகள் குறித்து தொழில் முனைவோர்கள் ஆலோசனைகள் நடத்தினர். மேலும், காணொலி காட்சி மூலம் பேசிய தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-
கட்டமைப்பு வசதி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சிறந்த தொழில்நகரமாக விளங்கி வரும் ஓசூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஓசூர் மாநகருடன் சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முதல் ஓசூர் வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநில, தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வர்த்தகம் செய்யக்கூடிய முக்கிய நகரமாக ஓசூர் திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழக அரசு ஓசூர் மாநகராட்சியில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், ரெயில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஓசூர் பகுதியில் தொடங்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
முன்னோடி மாநிலமாக...
தமிழகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு ஓசூர் பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, அரசு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து பொருளாதாரத்தில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்றம் அடைவதற்கு இக்கலந்துரையாடல் கூட்டம் வழிவகுக்கும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து, 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி இலக்கை அடைவது குறித்தும், வருகிற 10 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறையில் உள்ள போட்டித்தன்மை மற்றும் சவால்கள் குறித்த கையேடுகளை கலெக்டர் வெளியிட்டார்.
இதில், முன்னணி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இந்திய தொழில் கூட்டமைப்பு உற்பத்தியாளர் குழு இணை ஒருங்கிணைப்பாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.