பாண்டியர் கால சிலை கண்டெடுப்பு
நரிக்குடி அருகே பாண்டியர் கால சிலை கண்டெடுக்கப்பட்டது.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே பாண்டியர் கால சிலை கண்டெடுக்கப்பட்டது.
போர் தேவதை
நரிக்குடி ஒன்றியம் கட்டனூர் அருகே நாலூர் கிராம வயல்வெளிகளில் இடைக்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த துர்க்கை சிலை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
பாண்டியர்கள், பல்லவர்கள், முற்சோழர்கள் என அனைவரும் தங்களின் ஆட்சி காலங்களில் போரின் போது போர் தேவதையான யாமளாதேவி என்ற கொற்றவைக்கு பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த யாமளாதேவி பற்றிய செய்திகள் சங்க பாடலான புறநானூற்றுப் பாடலில் பாடப்பெற்றுள்ளது. அத்தகைய சிறப்புடைய கொற்றவைக்கு கோவில்களும் குடைவிக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு துர்க்கை
உதாரணமாக மாமல்லபுரம் மகிஷாசூரமர்த்தினி குகையை கூறலாம். இந்த கொற்றவைக்கு மகிஷாசூரமர்த்தினி, காளி, யாமளாதேவி, துர்காதேவி போன்ற பெயர்களும் உண்டு. காலப்போக்கில் இந்த கொற்றவை கோவில்களின் தேவகோட்டங்களில் இடம்பெற செய்தனர். அதில் எட்டு கரங்களுடன் வடித்து வைத்தனர். பின்பு அவை நான்கு கரங்களுடன் துர்க்கை என்ற வடிவில் வடிக்க ஆரம்பித்தனர். பிறகு அச்சிற்பங்கள் விஷ்ணு துர்க்கை என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது நாங்கள் கண்டறிந்த சிலையும் அந்த வகையை சேர்ந்தது ஆகும். இந்த சிற்பம் முட்டிவரை மண்ணில் புதைந்த நிலையிலும், 4 அடி உயரத்தில் காட்சி தருகிறது. ஒரு பெரிய பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். தலையில் பல அடுக்குகளை கொண்ட கரண்டமகுடம் காணப்படுகிறது.
பாண்டியர்கள் காலம்
நீண்ட காதுகளில் அணிகலன்களும், கழுத்தில் ஆபரணமும் மார்பில் சன்னவீரம் சற்றே சேதமடைந்து காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போர் கடவுள்களுக்கு மட்டுமே இடம்பெறும் ஒன்றாகும். இடையில் இடைக்கட்சையுடனும் 4 கரங்களில் 3 கரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இடது முன்கரம் மட்டும் ஹடிஹஸ்தமாக வைத்து கம்பீரமான தோற்றத்தில் பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்தில் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தை பார்க்கும் போது இப்பகுதியில் மிகப்பெரிய சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அவை காலஓட்டத்தில் அழிந்திருக்க வேண்டும் என கூறலாம். இந்த சிற்ப வடிவமைப்பை பார்க்கும் ேபாது சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த பாண்டியர்கள் காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.