மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு
கும்பகோணம் அருகே, சாலை விரிவாக்கத்தின்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவிடைமருதூர்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கன்பேட்டை பகுதியில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நேற்று நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மரம் வெட்டப்பட்டு அதன் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்தபோது மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 கருங்கல் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள் ஒவ்வொன்றும் சுமார் 3 அடி உயரம் இருந்தன.
பொதுமக்கள் திரண்டனர்
இதுகுறித்து தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அந்த சாமி சிலைகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பூக்கள் அணிவித்து வணங்கினர். இதுபற்றி நரசிங்கன்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தாசில்தார் சந்தனவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவரிடம், கண்டெடுக்கப்பட்ட 2 கருங்கல் சிலைகளும் ஒப்படைக்கப்பட்டன. இந்த பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு கோவில் இருந்திருக்கலாம். ஆகவே, மண்ணுக்குள் மேலும் சில சாமி சிலைகள் புதைந்து உள்ளனவா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.