பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரம் தெற்கு கிராமம், பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக்கூடத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி, 697 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரத்து 151 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மழைக்காலம் என்பதால் டெங்கு போன்ற காய்ச்சலில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 2 நாட்கள் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் காய்ச்சல் அறிகுறிகளால் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் வரவில்லை என்றால் அவர்களை கண்காணித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும், என்றார்.
இதில் வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.