பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அபாயகரமான இடங்களில் பேரிடர் ஒத்திகை- கலெக்டர் அம்ரித் தகவல்


பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அபாயகரமான இடங்களில் பேரிடர் ஒத்திகை- கலெக்டர் அம்ரித் தகவல்
x

நீலகிரி மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அபாயகரமான இடங்களில் பேரிடர் ஒத்திகை நடத்தப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில ்அபாயகரமான இடங்களில் பேரிடர் ஒத்திகை நடத்தப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

ஒத்திகை

நீலகிரி மாவட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை ஊட்டி அருகே நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்ககூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஒத்திகைப் பயிற்சியானது நடத்தப்பட்டது.

5 இடங்களில்...

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய பருவ காலங்களில் வெள்ளத்தினால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அபாயகரமான பகுதிகளாக ஊட்டி வட்டத்திற்குட்பட்ட முத்தோரை, பாலாடா, நஞ்சநாடு, குந்தா வட்டத்திற்குட்பட்ட முள்ளிகூர், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட குன்னூர் நகரம், கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட கன்னிகா தேவி காலனி, கூடலூர் வட்டத்திற்குட்பட்ட மேல் கூடலூர் ஆகிய 5 இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ளம் குறித்த ஒத்திகையை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் மிகவும் அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள இடத்தில் வெள்ளமோ, நிலச்சரிவோ நடக்கும் போது எவ்வாறு அரசுத்துறை அலுவலர்கள் உடனடியாக சென்று பேரிடரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பாதிக்கும் பகுதியாக எம்.பாலாடா கே.கே.நகர் நஞ்சநாடு 1 பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலமாகவும், படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி மற்றும் மரத்துவ பரிசோதனை செய்தல் குறித்து மருத்துவத்துறை மூலமாகவும் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியானது நடத்தி காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை நிகழ் பார்வையாளர் கவுசல் கே.ஆர்.பரீவா, வெலிங்டன் ராணுவம் அதிகாரி.பிரேம்குமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்யகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story