பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
குண்டும், குழியுமான சாலை
ஈரோடு சென்னிமலை ரோட்டில் காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மலைக்கோவில் மற்றும் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்துக்கு சாலை செல்கிறது. இந்த ரோடு குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோடு வழியாக வாகன ஓட்டிகள், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு சிலர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தும் செல்கிறார்கள். எனவே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காசிபாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் மலைபோல் குப்பை குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஊஞ்சலூர் பேரூராட்சி 3-வது வார்டுக்கு உள்பட்ட பரிசல் துறை வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்கள், ஊஞ்சலூர்.
மின் கம்பியில் செடி, கொடிகள்
வெள்ளோடு செல்லப்பம்பாளையம் நல்லிகாட்டுத் தோட்டம் பகுதியில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் செல்லும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன. மேலும் மின் கம்பமே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளன. மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பியில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெள்ளோடு.
குப்பை அள்ளப்படுமா?
நஞ்சைகோபி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபாளையம் கிராமத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்த பகுதியில் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நஞ்சை கோபி.