ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி மீன் வியாபாரி பலி
பென்னாகரம்:
ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி மீன் வியாபாரி பலியானார்.
மீன் வியாபாரி
தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே உள்ள நரசியர்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சூர்யா (வயது 31). மீன் வியாபாரி. இவர் நேற்று தனது சித்தியின் 3-வது மாத துக்க காரியத்திற்கு குடும்பத்தினருடன் ஒகேனக்கல் வந்தார்.
அங்கு இவர்கள் நாடார் காலனி காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சூர்யா ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு நீந்தி சென்றாராம். பின்னர் மீண்டும் திரும்பி மறுகரைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் ஆற்றில் மூழ்கினார்.
உடல் மீட்பு
அப்போது அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக உறவினர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி இறந்த நிலையில் சூர்யாவின் உடலை மீட்டனர். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் போலீசார் சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவிப்பு பலகை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடிக்கு குறைவாக இருந்த போதிலும் அறிவிப்பு பலகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் காவிரி ஆற்றில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே உரிய பாதுகாப்பு மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.