கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றசுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலிதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்


கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றசுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலிதிருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:30 AM IST (Updated: 22 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலை மாசிலா அருவியில் குளிக்க சென்றபோது 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பலியானார்.

மாசிலா அருவி

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா கார்த்திகை பட்டி கிராமத்தை சேர்ந்த 6 பேர் நேற்று காலை வேன் ஒன்றில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் காலை 9 மணி அளவில் மாசிலா அருவிக்கு சென்றனர்.

தற்போது மாசிலா அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் அதற்கு மேல் பகுதியில் அருவிக்கு நீர்வழி பாதையான எரச நாடிப்பட்டிக்கு சென்றனர். அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் பட்டதாரியான குணால் (வயது 22) என்பவர் திடீரென நிலைதடுமாறி சுமார் 50 அடி பள்ளத்தில் அருவி பகுதியில் தவறி விழுந்தார்.

பலி

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்து பள்ளத்தில் கிடந்த குணாலை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செம்மேட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணி 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story