புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் உத்தரவு


புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் உத்தரவு
x

புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை செயல்படுத்தும்விதமாக புலம்பெயர் தமிழர் நலவாரியத்தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியும், உறுப்பினர்களாக மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முகம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ.மீரான், சென்னையில் வசிக்கும் வக்கீல் புகழ்காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும். இவ்வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, ரூ.5 கோடி "வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி" என மாநில அரசின் முன்பணத்தை கொண்டு உருவாக்கப்படும்.

அதோடு மட்டுமல்லாமல், மூலதனச் செலவினமாக ரூ.1 கோடியே 40 லட்சம் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும். இவ்வாரியத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களை சேகரிப்பது அவசியமாதலால், அவர்கள் குறித்த தரவு தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். வெளிநாட்டிற்கு செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story