தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
சின்னாளப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சின்னாளப்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியில் இருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்தனர். பின்னர் கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜை செய்து, அதை பக்தர்கள் தலையில் உடைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர். அதன்பிறகு முள்ஆணி கொண்ட செருப்பை அணிந்து கொண்டு பூசாரி கோவிலை சுற்றி வலம் வந்து சக்தி கரகம் இறக்கினார். திருவிழாவில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.