தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

ஆயக்குடி வீரலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த புதுஆயக்குடியில் பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 16-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் இரவு அம்மன் கங்கைக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் நேற்று தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வீரலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கோவில் முன்புள்ள 10 அடி உயர சக்தி கம்பத்தில் சிறப்பு தீபம் ஏற்றபட்டது.

இதற்கிடையே தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் முன்பு 6 பெண்கள், 8 ஆண்கள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து கோவில் பூசாரி சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். அப்போது பக்தி பரவசத்தில் பக்தர்கள் அம்மன் துதிபாடி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story