பக்தர்கள் பால்குட ஊர்வலம்
அம்பலக்கொல்லி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கூடலூர்,
அம்பலக்கொல்லி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பால்குட ஊர்வலம்
கூடலூர் தாலுகா தேவாலா அருகே அம்பலக்கொல்லியில் முத்து மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை, இரவு 7 மணிக்கு நீர்மட்டம் கங்கைக்கரையில் இருந்து அம்மன் கரகம் பாலித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு நீர்மட்டம் ஆற்றங்கரையோரம் ஏராளமான பெண்கள், பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால் குடங்கள், காவடிகள் எடுத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
மஞ்சள் நீராட்டு
இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விசேஷ பூஜைகளும், மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் நாடுகாணி அருகே பாண்டியார் குடோன் பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு ஆமைக்குளம் பகுதியில் இருந்து பெண்கள் பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.