வள்ளியூர் பகுதியில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் தொடங்கி வைத்தார்
வள்ளியூர் பகுதியில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் ஆவரைகுளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆவரைகுளத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், பழவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம், சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. அந்தந்த பகுதியில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
மேலும் ஆவரைகுளம் பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளியில் 243 மாணவ- மாணவிகளுக்கும், பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ-மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் 5-ம் கட்ட பணிகளாக அம்பலவாணபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், ஆவரைகுளத்தில் 1.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும், பழவூரில் 1.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும், சிதம்பராபுரம் யாக்கோபுரம் பஞ்சாயத்தில் 1.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டி சபாநாயகர் அப்பாவு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன், சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்து பிரியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமலட்சுமி, உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.