ரூ.10 ஆயிரத்துடன் கீழே கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் துணை சூப்பிரண்டு
ரூ.10 ஆயிரத்துடன் கீழே கிடந்த மணி பர்சை போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே ஒரு மணி பர்சு கிடந்தது. இதனை கண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அதனை எடுத்து சோதனையிட்டதில், அதில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றும், ரூ.10 ஆயிரத்து 200 இருந்தது. மேலும் அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் வரை பஸ்சில் பயணம் செய்ததற்கான 2 பயண சீட்டும் இருந்தது. இதையடுத்து சஞ்சீவ்குமார் உத்தரவின் பேரில், போலீசார் அம்மாபாளையம் சென்று பொதுமக்களிடம் அந்த புகைப்படத்தை காட்டி அவர் யார்? என்று விசாரித்தனர். விசாரணையில், அவர் அம்மாபாளையம் தேரடி தெருவை சேர்ந்த வீராச்சாமி மகன் விஜய் என்பது தெரியவந்தது. இதையடுத்து விஜய் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் அவரிடம் அந்த மணி பர்சு மற்றும் ரூ.10 ஆயிரத்து 200-ஐ போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் ஒப்படைத்து இனிவரும் காலங்களில் இவ்வாறு கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தார்.