சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத அனுமதி மறுப்பு; தேர்வர்கள் சாலை மறியல்
சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத அனுமதி மறுப்பு; தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வை எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்குள் வந்தனர். இந்த நிலையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காலை 9 மணிக்கு மேல் வந்துள்ளனர். அவர்களை தேர்வு மையத்திற்குள் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கால தாமதமாக தேர்வு மையத்திற்குள் வருபவர்களை அனுமதிக்க முடியாது என கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.