அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாவட்ட துணைத்தலைவர் ராஜூ, வட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.