கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுங்கச்சாவடி

ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி செல்லும் வழியில் உள்ள பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் அந்த வழியாக அடிக்கடி விளைபொருட்களை டிராக்டரில் ஏற்றிச்செல்லும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் பல்வேறு தொழில் நிறுவனத்தின் வாகனங்கள் நாள்தோறும் அந்த வழியாக செல்லும் போது கட்டணம் செலுத்தவேண்டிய நிலை வரும். எனவே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்ற சங்கம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் அ.தி.மு.க. விவசாய அணி சார்பில் நேற்று காலை 9 மணி முதல் 10.45 மணி வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்பினர் பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் டிராக்டருடன் வந்திருந்தனர்.

உண்ணாவிரதம்

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறும்போது, 'பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் அடுத்த மாதம் உண்ணாவிரத போராட்டமும், அதன்பின்னர் தொடர் போராட்டமும் நடைபெறும்' என்றார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி கவுந்தப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story