மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - முத்தரசன்


மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - முத்தரசன்
x

மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முத்தரசன் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தேசிய துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் பாஸ்கர், மாநில பொருளாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகையை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் கடிதம் எழுதியதை மத்திய அரசு ஏற்று கொள்ள வேண்டும்.

தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய கணக்கீடு செய்ய வேண்டும். புதிய பயிர்காப்பீடு பதிவு செய்து மத்திய, மாநில அரசு உரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story