ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடிப்பு
திருச்சி பிராட்டியூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு, கடைகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பிராட்டியூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு, கடைகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை
திருச்சி - திண்டுக்கல் சாலை தீரன் நகரை அடுத்த பிராட்டியூர் மெயின் ரோடு பகுதியில் பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது, இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததை தொடர்ந்து பள்ளியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக பள்ளி அருகே உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பள்ளி அருகே பழனியம்மாளுக்கு சொந்தமான வீடும், அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான காலி மனை ஒன்றும், 3 கடைகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட உதவி இயக்குனர் புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதனை எதிர்த்து குடியிருப்பு வாசிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, நில அளவையர்களை கொண்டு நிலத்தை அளக்க உத்தரவிட்டது. இதில் அளவீடு செய்ததில் ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கோர்ட்டு ஆணையுடன் ஆக்கிரமிப்பை அகற்ற 2 பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வீட்டை இடிக்க முயன்ற போது, அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியம்மாள் பொக்லைன் எந்திரத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அவரது வக்கீல் சேதுமாதவன் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதி பா.ஜ.க. பிரமுகர் பரமசிவம், பாலசுப்பிரமணியம், அழகு ஆகியோர் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் 5 ேபரையும் பாதுகாப்பு பணியில் இருந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் மகாலட்சுமி என்பவரும் தனது காலிமனையை தர மறுத்து மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். உடனே அவரிடமிருந்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்ததுடன், தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமியையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பிராட்டியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.