'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கினர்.
போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையிலும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
ஒற்றை கோரிக்கை
இதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் (டி.பி.ஐ. வளாகம்) இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். அவர்களிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், 'எங்களுடைய ஒற்றை கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நிறைவேற்ற கோரி நாங்கள் போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறோம். இப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், எப்போதிலிருந்து அதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அரசு தெரிவித்தால்கூட நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி விடுவோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும்போது மாணவர்கள் நலன் பாதிக்காத படியே அதனை மேற்கொண்டு வருகிறோம். அந்தவகையில் இந்த முறையும் அரையாண்டு விடுமுறையில் நாங்கள் குடும்பத்துடன் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுகிறோம்' என்றார்.