முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் மாலை பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அவரது மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரவாண்டி நகர தி.மு.க. துணைச்செயலாளர் சித்ரா விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் மீது வதந்திகளை பரப்புவது, கலகம் செய்வதற்கு தூண்டி விடுதல், அமைதியை சீர்குலைப்பது, பெண்களை தவறாக பேசுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதிகாலையில் கைது
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு தேவனூரில் உள்ள வி.ஏ.டி.கலிவரதன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த வி.ஏ.டி.கலிவரதனை போலீசார் எழுப்பி கைது செய்தனர். பின்னர் விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர், வி.ஏ.டி.கலிவரதனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வி.ஏ.டி.கலிவரதன் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.