ஈரோடு கடைவீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்


ஈரோடு கடைவீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
x

ஈரோடு கடைவீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு


ஈரோடு கடைவீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், அதற்கு பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். ஈரோடு மாநகரிலும் கடந்த ஒரு வாரமாக தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியது. முக்கிய கடை வீதிகளான நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு ஆகிய பகுதிகளிலும், மேட்டூர்ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, காளைமாட்டு சிலை ஆகிய பகுதிகளிலும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஜவுளி கடைகளும், இனிப்பு கடைகளும் மின்னொலியில் ஜொலித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் நேற்று கடை வீதியில் குவிந்தார்கள். பகல் 11 மணிஅளவில் இருந்தே கூட்டம் கூட தொடங்கியது. பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வழியாக செல்லும் பஸ்கள் பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

கூட்டநெரிசல்

ஈரோட்டில் அதிகமான ஜவுளிக்கடைகள் உள்ள கனிமார்க்கெட் பகுதி, நேதாஜிரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை ஆர்வமாக வாங்கினார்கள். எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலைகளாக காணப்பட்டது. கடைவீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்களை ஈடுபடுவர்களை பிடிப்பதற்காக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட உயர்கோபுரங்களில் ஏறி நின்று போலீசார் கண்காணித்தனர். தீபாவளி விற்பனை களைகட்டி இருப்பதால், ஏராளமான சாலையோர கடைகளும் முளைத்து உள்ளன. மலிவு விலையில் விற்பனை செய்யும் ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அங்கும் பொதுமக்கள் திரண்டனர்.


Next Story