சேலம் அருகே செங்கல் சூளையில்தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பலிஉடல்களை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்
சேலம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்களை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
சேலம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்களை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல் சூளை
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. லாரி டிரைவர். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுக்கு பத்மகுமார் (வயது 11), ஸ்ரீதர் (8), கிரிவாசன் (5) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதில் பத்மகுமார் சுக்கம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், ஸ்ரீதர் செங்காட்டூர் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இதனிடையே ராமசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை புஷ்பா கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று பத்மகுமார் தனது தம்பிகள் 2 பேருடன் அந்த பகுதியில் செங்கல் சூளைக்கு சென்றார்.
பின்னர் அவர்களில் கிரிவாசனை தவிர மற்ற 2 பேரும் ஆடைகளை கழற்றிவிட்டு செங்கல் தயாரிப்புக்கு தார்ப்பாயால் அமைக்கப்பட்டிருந்த 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்தனர்.
அண்ணன், தம்பி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக பத்மகுமாரும், ஸ்ரீதரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த கிரிவாசன் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். தொடர்ந்து அவர்கள் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த அண்ணன், தம்பியின் உடல்களை வெளியே எடுத்தனர்.
அப்போது பத்மகுமார், ஸ்ரீதரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். புஷ்பா தனது 2 மகன்களின் உடல்களையும் மடியில் போட்டு கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா மற்றும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
போராட்டம்
ஆனால் 2 பேரின் உடல்களை எடுப்பதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, அனுமதி இல்லாமல் செங்கல் சூளை நடத்தி வரும் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கலெக்டர் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.