சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முத்துப்பேட்டை:
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் பழனிவேலு (தி.மு.க.):- ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பகுதியில் சுமார் 45 கிராமங்கள் முழுவதும் குடிசை வீடுகள், மூங்கில் தோப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு மையமாக உள்ள இடும்பாவனத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
தேவகி (தி.மு.க.):- அம்மலூர் பயணிகள் நிழலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டி தரவேண்டும். சிவராமன் நகர் பகுதியில் சமுதாய கூடம் கட்டித்தரவேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
யசோதா (தி.மு.க.):- மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைத்து தரவேண்டும். அந்த பள்ளிக்கு சுற்று சுவர் கட்டித்தரவேண்டும்.
ராஜா (பா.ம.க.):- ஓவரூர் பகுதியில் உள்ள நான்கு சுடுகாடுகளுக்கும் சாலை வசதி மற்றும் மயான கட்டிடம் கட்டித்தர வேண்டும். அனைத்து பகுதியிலும் சாலைகள் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. அனைத்து சாலைகளையும் சீரமைத்து தரவேண்டும்.
சுற்றுச்சுவா்
ஜெயராமன் (அ.தி.மு.க.):- இடும்பாவனம் நூலகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டும். விளாங்காடு, மங்களநாயகிபுறம் ஆகிய பகுதியில் புதிய சுடுகாடு கட்டிடம் கட்டித்தரவேண்டும்.
ரோஜாபானு (தி.மு.க.):- உதயமார்த்தாண்டபுரம், நாச்சிக்குளம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் மின்சாரமே வருகிறது. இதனால் புதிய மின் மாற்றி அமைத்து தரவேண்டும். நாச்சிகுளம் பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டும் என நீண்டகாலமாக கூறி வருகிறேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி அருகே குளம் உள்ளது இந்த ஆபத்தை உணர்ந்து சுற்றுச்சுவர் கட்டிடத்தரவேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
மோகன் (தி.மு.க.):-ஆலங்காடு மற்றும் உப்பூர் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் சரிவர வருவதில்லை. மூன்று நாளைக்கு ஒருமுறையாவது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமதி (கம்யூ):- வெள்ளந்தாங்கிதிடல் பகுதியில் மயான கொட்டகை அமைத்து தரவேண்டும்.
கனியமுதாரவி(தலைவர்) உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைளும் விரைவில் நிறைவேற்றிப்படும் இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக மேலாளர் சாமிநாதன் வரவேற்றார். முடிவில் அலுவலர் கார்த்தி நன்றி கூறினார்.