தியாகதுருகம் பகுதியில் பலத்த மழை:200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை


தியாகதுருகம் பகுதியில் பலத்த மழை:200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

பலத்த மழை

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, பராமரித்து வந்தனர். இந்த பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஒட்டியுள்ள சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதை பார்த்து கவலையடைந்த விவசாயிகள் வயலில் தேங்கிய தண்ணீரை பெரும் சிரமங்களுக்கு இடையே வெளியேற்றினர். இருப்பினும் விவசாயிகள் தங்களது வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெய்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்து வருகிறார்கள்.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஓருவர் கூறுகையில், நாகலூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் ஏரிக்கு செல்லாமல் அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நிவாரணம்

குறிப்பாக என்னை போன்ற விவசாயிகள் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். தற்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. சாய்ந்த நெற்பயிர்களில் இருந்து நெல் மணிகளும் முளைக்க தொடங்கி விட்டன.

இனி நெற்பயிர்களை அறுவடை செய்தால் அறுவடை கூலி கொடுக்கவாவது பணம் கிடைக்குமா? என எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்றார்.


Next Story