'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு நன்றி
உத்தமபாளையம் கலிமேட்டுப்பட்டியில் குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் படத்துடன், செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை சரிசெய்து உள்ளனர். இதற்காக அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் கலிமேட்டுப்பட்டி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
-ஜெகதீஸ்வரன், உத்தமபாளையம்.
வேகத்தடை அவசியம்
பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் திருநகர் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள் சாலையை கடப்பதற்கு சிரமமாக இருக்கிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-மன்சூர்அலி, பழனி.
குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்
சின்னமனூர் சங்கிலிதேவன் குளத்தை சுற்றி மக்கள் தினமும் நடைபயிற்சி சென்று வருகின்றனர். இந்தநிலையில் ஒருசிலர் குளத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால், நடைபயிற்சி செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். எனவே குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சி சுப்பையாபிள்ளைநகரில் உள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டி நீண்ட நாட்களாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கோடைகாலமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-ஹரிபிரசாத், சீலப்பாடி.
லாரிகளால் விபத்து அபாயம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் டிப்பர் லாரிகள் பாரம் ஏற்றி கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே வேகமாக செல்லும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
கிடப்பில் போடப்பட்ட தரைப்பால பணி
கம்பத்தில் வட்டார கல்வி மையம், தொடக்கப்பள்ளி, ரேஷன்கடை அமைந்துள்ள பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
-ரம்யா, கம்பம்.
பாதையை மறித்து வாகனங்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வுதள பாதையை மறித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாய்வுதள பாதைக்கு குறுக்கே வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தேனி.
சாலையில் திரியும் கால்நடைகள்
போடியில் பஸ் நிலையம், மெயின்ரோடு, தினசரி மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள், கழுதைகள், நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். சாலையின் குறுக்கே செல்லும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், போடி.
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் மேற்குரதவீதியில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த புகையிலைபட்டியில் இருந்து கோவிலூர் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
=====
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.