'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருநெல்வேலி

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி விலக்கில் இருந்து சங்குமுத்தம்மாள்புரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்குவதால், சாலை சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து, சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முத்துகுமரன், சங்குமுத்தம்மாள்புரம்.

ஒளிராத மின்விளக்குகள்

அம்பை தாலுகா கோடாரங்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களில் பெரும்பாலான மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இருளில் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-வேலு, கோடாரங்குளம்.

சேதமடைந்த குப்பைத்தொட்டி

நெல்லையை அடுத்த பேட்டை ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள இரும்பு குப்பைத்தொட்டி உடைந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அதன் அருகில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். எனவே அங்கு புதிய குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-அபுபக்கர், பேட்டை.

வேகத்தடை தேவை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கீழ விஜயாபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன்பாக சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலையில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ரூபான், கீழ விஜயாபதி.

* பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பள்ளிக்கூடத்தின் முன்பாக சாலையில் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. அங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் போன்றவையும் உள்ளன. அங்கு சாலையை கடக்க முயலுகிறவர்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜெயினுல் ஆப்தீன், பாளையங்கோட்டை.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரஹ்மத்நகர் சாலை வளைவில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என்று அம்ஜத் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீண்டும் இரவில் ஒளிர்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

எலும்புக்கூடான மின்கம்பம்

சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் மலையான்குளம் விலக்கு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மகாலிங்கம், சங்கரன்கோவில்.

வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அவசியம்

தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரம் வாறுகால் திறந்தநிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், பாதசாரிகள், வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-அனந்த பத்மநாபன், தென்காசி.

பாதை வசதி தேவை

தென்காசி- நெல்லை சாலை விரிவாக்க பணிகளுக்காக, பாவூசத்திரம் அருகே ராமச்சந்திரபட்டணம் மெயின் ரோட்டின் ஓரத்தில் வாறுகால் உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக 4 தெருக்களுக்கு செல்வதற்கு போதிய பாதை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வாறுகாலுக்கு இணையாக தெருக்களுக்கு செல்லும் பாதையையும் உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-செல்லத்துரை, ராமச்சந்திரபட்டணம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.


Next Story