தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது
கேசவன்புதூர் மேலத்தெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மிகஅருகில் உரசியபடி செல்கிறது. இதனால், வீடுகளில் வசிப்போர் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீடுகளின் அருகில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
விபத்து அபாயம்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சந்திப்பு பகுதியில் இருந்து பீச் சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் தொலைபேசி கேபிள் வயர்கள் கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகளின் கால்கள் வயரில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாதசாரிகள் நலன்கருதி நடைபாதையில் கிடக்கும் வயர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
மருத்துவ கழிவுகளால் ஆபத்து
வடுகன் பற்றிலிருந்து பொற்றையடி செல்லும் நான்கு வழிச்சாலையோரத்தில் தேவகுளம் உள்ளது. இந்த குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும் இரவிலேயே இந்த கழிவுகள் தீவைத்து எரிக்கப்படுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், தேவகுளம்.
குளம் தூர்வாரப்படுமா?
அழகியபாண்டியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடுக்கரை கிராமத்தில் ஈரங்கிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சரவணகுமார், கடுக்கரை.
காத்திருக்கும் ஆபத்து
தோவாளை ஒன்றியம் சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் குளத்துக்கு செல்லும் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடக்கிறது. பல நாட்கள் ஆகியும் அது சரி செய்யப்படவில்லை. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணராமல் அந்த மின் கம்பியை யாராவது மிதித்தால் ஏற்படும் விளைவை உணர்ந்து, அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விஜேஷ், விசுவாசபுரம்.
எரியாத மின்விளக்கு
கன்னியாகுமரி முருகன்குன்றத்தில் இருந்து சுனாமி காலனிக்கு செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரம் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், சுனாமிகாலனி.