தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஹென்றி சாலை உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடைக்காக போடப்பட்ட மூடி உடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அதில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சிமெண்டு சிலாப்பு கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், நாகர்கோவில்.
அகற்ற வேண்டிய மின்கம்பம்
காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் பூவன்விளை பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் ஒரு பாதையின் நடுவிலும், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறாகவும் அமைந்துள்ளது. மேலும் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.கனகம், காட்டாத்துறை.
சுகாதார நிலையம் திறக்கப்படுமா?
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரிவிளை பகுதியில் தென்தாமரைகுளம், ஆண்டிவிளை, கரும்பாட்டூர், சாமிதோப்பு, பூவியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துணை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கட்டி 9 மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சுகாதார நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.
விபத்து அபாயம்
குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. அதில் சில பஸ்கள் நிறுத்தத்தில் நிற்கும்போது பிரேக் விளக்கு வேலை செய்வதில்லை. அதுபோல் வலது மற்றும் இடது பக்கம் திரும்பும் போதும் சிக்னல் விளக்கும் வேலை செய்வதில்லை. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு பஸ் நிற்க போகிறதா அல்லது வளைவில் திரும்ப போகிறதா என்று தெரிவதில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், குருந்தன்கோடு
குப்பைகளை அகற்ற வேண்டும்
கொட்டாரம் பேரூராட்சியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகாலின் வலது புறம் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இ்தனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.ராம்தாஸ், சந்தையடி.
சேதமடைந்த நூலக கட்டிடம்
அஞ்சுகிராமம் பேரூராட்சிகுட்பட்ட லெட்சுமிபுரம் பகுதியில் நூலகம் உள்ளது. இ்ந்த நூலக கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலக கட்டிடத்தை சீரமைத்து, காம்பவுண்டு சுவர் கட்டித்தர அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எஸ்.காமாட்சி, லெட்சுமிபுரம்.